×

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

 

மதுரை, பிப்.14: மதுரையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிக வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே பணிகளை புறக்கணித்து உண்ணாவிரப் போராட்டம் நடத்தினர். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

கலைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை பணிக்கான 97 சிறப்பு பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கைகளில் பதாகைகளை ஏந்திய படியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் மற்றும் பொது விநியோக திட்டம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமான பல்வேறு அரசு பணிகளும் முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபி கூறும்போது,‘‘கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளோம். அதன்படி முதல் கட்டமாக மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. பிப்.22ல் காத்திருப்பு போராட்டமும், பிப்.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தவுள்ளோம்’’ என்றார்.

The post 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...